அறிவியல் புத்தகங்கள் சார்ந்த கருத்துகள்

aliens-front-tசில மாதங்கள் முன்னர் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பரிசு கொடுப்பதற்காகச் சில பிரதிகள் வேண்டும் என்று கோரியதை நான் முன்வைக்கையில் தான் பதிப்பாசிரியருக்கும் விஷயம் தெரியவந்தது. என் ஏலியன்கள் இருக்கிறார்களா? அறிவியல் புத்தகம் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளது.

விற்பனையாவதற்குச் சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ளது.

உள்ளடக்கத்தை முழுவதும் புரிந்துகொள்வதற்கு வாசகரின் உழைப்பையும் கோரும் அறிவியல் புத்தகங்கள் தமிழில் விற்கவே விற்காது என்று சாதிப்பவர்கள் உள்ளனர். அவ்வகை உழைப்பை வழங்க ஆயத்தப்படுபவர் மட்டும் வாங்கி வாசித்தால் போதும் என்று கருதுபவர்களும் உள்ளனர். பதிப்பாளர்களிலும் இவ்விரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டோர் உள்ளனர் — முதல் நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோரும் இரண்டாவதில் எஞ்சும் ஓரிருவரும்.

கலையின் சிறப்பு ஏற ஏற அதன் வர்த்தக வீச்சு சரிந்துகிடக்கும் என்பது சந்தை விதி. தமிழ்ப் புத்தகச் சந்தையும் சந்தை விதிகளுக்கு உட்பட்டதே.

தமிழில் எழுதப்படும் அறிவுத் துறைப் புத்தகங்கள் விற்காது என்று கருதும் பதிப்பாளரும் விற்கும் என்று கருதும் பதிப்பாளரும் உண்மையே சொல்கிறார்கள். இது புரிவதற்கு எனக்கு சில புத்தகக் காட்சிகளும் பழக்கங்களும் தேவைப்பட்டது. விற்காது என்பவர் அச்சிட்ட அடுத்த வருடத்தினுள் இரண்டாயிரம் பிரதிகள் விற்காது என்கிறார் (அப்படிச் செய்தால் அப்புத்தகம் பெஸ்ட்-ஸெல்லர்; நல்ல லாபம் ஈட்டியிருக்கும்). விற்கும் என்பவர் இரண்டு வருடத்தில் அறுநூறில் இருந்து ஆயிரம் பிரதிகள் விற்றுவிடும் என்கிறார் (சுமார் அல்லது சொற்ப லாபமே).

ஏலியன்கள் இருக்கிறார்களா? புத்தகத்திற்கு வாய்த்துள்ளது இரண்டாவது நிலை.

nano-front-tநேனோ ஓர் அறிமுகம் புத்தகமும் இதே வகையில் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டதாம். இரண்டு அறிவியல் புத்தகங்களும் இவ்வருடம் புத்தகக் காட்சியை ஒட்டி மீண்டும் அச்சிடப்படவுள்ளது. என்னுடைய ஒரு புதிய அறிவியல் புத்தகமும் வெளிவரும் என்று அறிகிறேன்.

லைப்ரரி ஆர்டர் என்று தமிழ்நாடு தழுவிய தில்லாலங்கடி ஒன்று உள்ளது. அதை இங்கு சேர்க்கவில்லை. சந்தையில் விற்பனை என்பதை வைத்து மட்டுமே மேற்படி அவதானிப்பு.

(உபரி தகவல்: இப்படி லைப்ரரி ஆர்டராய் மட்டுமே அச்சகத்திலிருந்து நேரடியாக ‘விற்றுத் தீர்ந்த’ அறிவியல் புத்தகம் ஒன்றையும் அடியேன் எழுதும் பாக்கியம் பெற்றேன். எனக்குரிய ‘எழுத்தாளர் பிரதி’யே ஒரு வருடம் கழித்து நான் மொக்கையாக விடைத்துக்கொண்ட பிறகு பெருந்தன்மையாய் பெருத்த ஏப்ப சப்தத்துடன் என் கண்களில் காட்டப்பட்டது.)

மேலுள்ள இரண்டு விற்பனை நிலைப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமானது என்று கொள்ள முடியாது. மிகச் சிறப்பான கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவருடைய பிரெஞ்சுக் கவிதைகள் சமகாலத்தில் முன்னூறு பிரதிகளே அச்சிடப்படுகின்றதாம். நுண்கலைகள் அனைத்திற்கும் உலகெங்கிலும் இதே நிலைதான். இதற்கு வருந்த வேண்டியதில்லை என்பேன். ஆர்வம் இருப்பவர்கள் அத்துறை எழுத்தை வாசித்தால் பழகினால் போதும். என்னையும் சேர்த்து அனைவரும் கவிஞர்கள் என்று தமிழ்நாட்டில் நினைத்துக்கொள்வதில் உள்ள அபாயத்தைத் தான் இன்றுவரை அனுபவித்துவருகிறோமே. உலகில் அனைவரும் விஞ்ஞானிகளாகி என்ன செய்யப்போகிறோம்.

குடியாட்சியில் மக்கள் அவர்களுக்கு உகந்த அரசாங்கத்தைப் பெறுகிறார்கள் என்பது சமூக விதி. அரசாங்கத்தின் தன்மை அதை விரும்பும் மக்கள் சமூகத்தின் சமகால குணநலன்களைச் சார்ந்தது. சந்தையில் விற்பனைப் பொருள் என்றாகிவிட்ட பின்னர் எத்துறை எத்திணை எத்தனை என்பது போன்ற புத்தகங்களின் குணாதிசியங்கள் அவற்றைத் தங்கள் மேம்படுதலுக்கோ பொழுதுபோக்கிற்கோ தேவை அவசியம் எனக் கோரும் வாசகர்களைச் சார்ந்தது. அவர்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று முந்தீர்மானித்துவிட்ட அறிவுத்துறைகளில் நுண்கலைகளில் நல்ல புத்தகங்கள் பிரசுரிக்கப்படுவதால் மட்டும் என்ன பயன்?

மேலும் வாசகர்களில் குறிப்பிட்ட சதவிகித்தனர் தான் இலக்கியம் முழுமையாக வாசிக்கிறார்கள். அவர்களே அறிவியலையும் முழுமையாக வாசிப்பவர்கள் என்றே கொள்ள இயலாது. வாசக சமூகத்தின் குழாம்களும் அவற்றில் ஊடாடும் பொது அங்கத்தினர்களின் எண்ணிக்கையும் வருடாவருடம் என்றில்லையெனினும் பத்தாண்டுகளிலாவது மாறுபடுபவை.

நல்ல அறிவுத் துறைப் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் தமிழில் ஒருவருடத்தில் இரண்டாயிரம் பிரதிகள் விற்பனை எனும் நிலையை என்றாவது எட்டுமானால் மகிழ்ச்சியே.

ஆனால் உலகில் எச்சமூகத்திலும் எத்துறையிலும் புத்தகங்கள் எட்டிவிடக்கூடாத நிலையொன்று உள்ளது. மோசமான, குறையான, எளிமைப்படுத்திச் சொல்கிறேன் என்று படுத்தி மட்டும் சொல்லும், பிழையான முன்மாதிரிகள் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுவிடும் நிலை. விளம்பரங்களில், தெரிந்தே செய்யப்படும் விற்பனையை வீங்க வைக்கும் வியாபார உத்திகளில், இவ்வகைப் புத்தகங்களினால் ஏற்படும் ஊறு பொருட்படுத்தப்படவேண்டியதே.

அறிவுத் துறைகளை அறிமுக நிலையிலாவது தமிழிலேயே அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ள வாசகர்களை திட்டமிட்டுத் தடம்புரட்டிக் காசை வாங்கிக்கொண்டு கைகழுவும் செயலைப் பதிப்பாளர்கள் வர்த்தக லாபம் மட்டுமே கருதிச் செய்யலாம். ஆனால் வாசகர்கள் அவ்வகைப் புத்தகங்களை அடையாளம் கண்டு (நிறைய விளம்பரத்துடன் வெளிவருவதே ஒரு அபாயச் சங்கு…) தொடர்ந்து வாங்காமல் இருப்பது அவசியம். தெரிந்தே மட்டமான புத்தகங்களையே மக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர் என்றால் அச்சமுதாயத்தின் நிலையைப் பிரசுரமாகி வந்தாலும் நல்ல புத்தகங்களால் தான் என்ன செய்துவிடமுடியும்?

அறிவுத் துறைப் புத்தகங்கள் தீவிரமான உள்ளடக்கத்துடன் இருப்பதால் தானே விற்பனை ஆவதில்லை என்பார்கள். நீச்சல் தெரிவதற்கு நீரில் இறங்க வேண்டும். நீரில் இறங்க வேண்டும் என்றால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்…

இணைய எழுத்து சேர்த்தியாக எழுத்தாள வாசகப் பதிப்பாளப் பெருங்கூட்டம் ஒன்றே இவ்வகை இரட்டுற நிலைபாட்டில் அமிழ்ந்துள்ளது. எந்த அறிவுத் துறை எழுத்து என்றாலும் ஓரிரு பத்திகளில்/பக்கங்களில் அறிவார்ந்த உள்ளடக்கத்தை வழங்கி மீதி எண்பது சதவிகிதம் பக்கவாட்டில் திரும்பி நின்று வேடிக்கை காட்டுவதைச் செய்வது மட்டுமே அறிவுத் துறைகளை ‘சாமான்ய’ வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான நெறி எனும் நிலைப்பாடு. எழுத்தில் வேடிக்கை இயல்பாகக் கைகூடினால் வாசகன் மனத்தில் ஓரளவேனும் சொல்லப்பட்டிருக்கும் அறிவுத் துறை எழுத்து எஞ்சலாம். இல்லையேல் இவ்வகை நிலப்பாட்டுடன் உருவாக்கப்படும் எழுத்தில் அறிவுத் துறை விஷயங்கள் சாக்லெட் சுற்றப்பட்டும் தோலி போலாகிவிடும்.

அறிவியல் சார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை நான் கவனிக்கும் மற்றொரு ஊறு, செய்திகளையும் தகவல்களையும், விளக்கங்கள், விவரணைகள் என்று கருதிக்கொள்வது. இந்தச் சமனை அறிவுத்துறை எழுத்தை வழங்குவோரும் செய்துகொண்டுள்ளதே வேதனை.

விளக்குவதற்குச் சுருக்கமாய் ஒரு உதாரணம். நேனோ தங்கம் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியுள்ளேன். நேனோ அளவு துகள்களாய் இருக்கையில் தங்கம் நீல நிறத்தில் நம் கண்களுக்குத் தெரியலாம் என்பது ‘லேட்டஸ்ட்’ அறிவியல் தகவல் (மட்டுமே). ஏன் அவ்வாறு தெரிகிறது என்பதற்கான விளக்கம் வழங்குவதும் அதைப் புரிந்துகொள்வதுமே நேனோ தங்கம் செயல்பாடு பற்றிய புரிதலை மேம்படுத்தும். அப்போது (மட்டும்) தான் வாசகன் எழுதப்பட்டுள்ள அறிவுத் துறை கட்டுரை அல்லது புத்தகத்தில் இருந்து செய்தி/தகவல் நிலையைத் தாண்டிய உயர் சிந்தனை எதையோ கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறான்.

செய்திகளை மட்டுமே உள்ளடக்கிக்கொண்டு நான்கைந்து சக்கரைப் பூச்சுக்களுடன் வெளியாகும் ‘அறிவுத்துறை’ கட்டுரைகளை, அவை இடப் பற்றாக்குறையுடனான தின/வார/மாத விற்பனை அவசியங்களுடனான சந்தை ஏட்டுக் கட்டுரைகள் என்கையில் மன்னித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை இவற்றை எழுதாமல் இருப்பதே நன்மை என்றாலும். ஆனால் புத்தகங்களில் ‘உட்டாலக்கடி’களையும் ‘ஜல்லியடித்தல்’களையும் மட்டுமே செய்பனவற்றை மன்னிக்கக் கூடாது.

மெய்யில் ஒரு அறிவுத் துறை (உதாரணமாக, அறிவியல்) இயங்கும் விதத்தையோ, கண்டடைந்த புரிதல்களையோ அறிந்துகொள்வதற்கு நாம் செய்தி தகவல் ஆகியவற்றைத் ‘தெரிந்து’கொள்ளும் அறிவுநிலையிலிருந்து நம்மை உயர்த்திக்கொள்ளவதால் மட்டுமே இயலும். அதற்குத்தான் அறிவுத் துறை புத்தகங்கள். பாட புத்தகங்கள் என்றில்லை. அறிமுக நிலையில் என்றாலும், அவ்வாறு செய்தி/தகவல் நிலையைக் கடந்த எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிய தீவிரமான விளக்கங்கள் பரிசீலனைகள் கொண்ட உள்ளடக்கத்துடன் தான் அப்புத்தகங்கள் உருவாகி இயங்கவேண்டும். பெ.நா. அப்புசாமியின் அறிவியல் எழுத்து ஒரு சிறந்த உதாரணம். மோசம் என்பதற்கான உதாரணங்கள் எதிலும் அதிகமே, குறிப்பிடுவதைத் தவிர்ப்போம்.

அறிவுத்துறை எழுத்தை தீவிரமாக்கி உருவாக்கிக் கொண்டுசேர்த்து உள்வாங்கவைப்பதற்கு எழுதுபவரின் உழைப்பு முக்கியம் என்றால், வாசகரின் உழைப்பு அதிமுக்கியம். எழுதுபவர் ஓரளவுதான் உதாரணங்கள் வழங்கி எளிமையாக்கி ஓரிரு வேடிக்கைகள் செய்து விஷயங்களை அளிக்கமுடியும். அவற்றைப் பொறுமையுடன் முழுமையாக வாசித்து மனத்தில் உள்வாங்கி, யோசித்து, எழும் சில சந்தேகங்களை மேலும் சிலவற்றை வாசித்தோ யோசித்தோ விவாதித்தோ வாசகர் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். அறிவியல், இசை, எக்கனாமிக்ஸ், இலக்கியம் என்று அனைத்திற்கும் இவ்வகை உழைப்பு அவசியமே.

இவ்வுழைப்பை வழங்கும் வாசகர் குழாம் தமிழர்களுள் இல்லவே இல்லை என்று சாதிப்பவர்கள் — சமகால எழுத்தாளர்கள் சேர்த்தியாக — சாதித்திராதவர்கள். தங்கள் எழுத்தை வாசிப்பவனைத் தம்மை விட அறிவில் சிறுத்தவனாய்க் கொள்ளும் இச்செய்கையும் ஒருவகைப் பாதுகாப்பின்மையே. இதைச் செய்கையில் எதையுமே தீவிரமாய்ச் செய்து பார்த்திராத அவர்களது ஆளுமை மனத்தளவிளாவது விசுவரூபம் பெறுகின்றது போலும். தமிழுலகமே அத்தருணத்தில் அவர்கள் மனக்கண்களில் மீட்கமுடியாத அதளபாதாளத்தில், அறிவேட்கையுடன் ஆவென்று வாய் பிளந்தவாறு… சர்க்கரை தடவிய சாக்லெட் தோலிகளை இரைத்தால் போயிற்று. இது போதும் இத்தமிழர்களுக்கு…

அறிவுத் துறை எழுத்து எடுத்துக்கொண்ட துறையில் வாசகனுக்குத் தெரியாதவற்றை அல்லது வேண்டியவற்றை எளிமையாக்கிச் சொல்ல விழையலாம், அவசியப்படலாம். ஒருபோதும் வாசகனை அவ்வெழுத்தைவிட எளிமையாக்கி நோக்கக் கூடாது. அவ்வாறு ஆகிவிட்டால் என் அறிவுத்துறை எழுத்தும் பிரசுரமானாலும் புறக்கணிக்கப்படவேண்டியதே.

மண்ணில் இந்தக் காதல் இன்றி

தவிப்புதான் காதலா? காதல் தவிப்பென்றால் தவிப்பதெதற்கு? அது தெரிந்தால், அத்தவிப்பை தீர்த்திடும் வழிகளை ஆய்ந்து விடை கண்டுவிடலாமோ? தவிப்பைத் தீர்த்துவிட்டால் காதலும் தீர்ந்துவிடுமா?

காதல் என்பது அன்பு + காமம் / 2 எனலாம். அன்பும் காமமும் சரிவிகிதத்தில் கலந்து செய்த கலவை உணர்வு. ஏன் என்பதற்கு நீங்களும் நானுமே விளக்கங்களாக முடிவதுமுண்டு. மனத்தைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் பிறப்பு இருவரிடத்தேயான காமத்தினால் மட்டுந்தானா? அதே இருவரிடத்தேயான காமமற்ற அன்பினால் மட்டும் பிறந்திருப்பீர்கள் தானா? பெற்றது உங்களையோ தெய்வங்களையோ என்றிடினும், குந்தியும் மேரியும் உங்கள் அம்மாக்கள் என்றால் ஒப்புவீர்களா, மனைவிகள் என்றால் சகிப்பீர்களா? இப்போது கூறுங்கள் காதல் என்பது அன்பு + காமம் / 2 எனலாம் அல்லவா.

நம் பிறப்பு நற்பிறப்பே எனக் கருதி மனித குலம் ஜீவித்திருக்க அவசியமான காதலைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

அன்பு யாரும் எவரிடமும் எழுப்பலாம். அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ் என்கையில் தந்தை மகனிடத்தில் கொண்டதும், ஆசிரியர் மாணவனிடம் கொண்டதும், தங்கை தனையனிடம் கொண்டதும் சேர்த்துத் தம்பதியர் கருத்தொருமித்தவர் என எவரிருவருக்குமிடையேயும் ஏற்படக் கூடும் தான். அன்பு காட்ட, பெற, காமம் இடையூறில்லை.

காமம் பொதுவாக ஒரு சாரார் மறு சாராரிடம் பருவ வயதில் தொடங்கிப் பலகாலம் எழுப்பிக்கொள்ள முடிவது. காமத்தை எழுப்பிக்கொள்ள சம்பந்தப்பட்ட இருவரிடையே அன்பு கட்டாயமில்லை. வெறும் காமம் அன்புமில்லை, முக்கியமாகக் காதலும் இல்லை. எனின், உலகின் ஆதி தொழில் அற்றிருக்கும் அந்நாளே, காதலால் காப்பாற்றப்பட்டு. மாதவியும் மற்று மொரு கண்ணகியாய் அறியப்பட்டிருப்பாள் இளங்கோவிற்கே.

காதல் அன்பின் குறுந்தொகை யன்று. அன்பு துயரற்றது. காதல் அன்பு மட்டுமில்லை. துயறுருவது. காதல், காமம் கூடிய அன்பு. எவ்விகிதத்தில் என்பது பங்குபெறும் மனங்களைப் பொறுத்தது. காமமற்ற காதல் என்பது அன்பினையும் அடைக்குந் தாழ். கனவுகளைப் பயந்து கண்விழித்தே இருப்பது. பெருமூச்சுகளாய் தவமிருந்து வயோதிகம் வளர்ப்பது. ஊரை ஏமாற்றுவதான சுய ஏமாற்று. காமம் ஒளித்த காதல் காவியணிந்தக் கிளர்மனம். பேரறிவாளனின் பெருமூச்சு. படிகளற்றப் பத்தினி வீடு.

தவிப்பு என்பது காமமா? அவ்வாறெனின் காதலற்ற ஓரிடத்தில் காமம் தீர்ந்துவிடும் வாய்ப்புண்டு. அவ்வாறு காமம் தீர்ந்ததும் தவிப்பும் அடங்கிவிடவேண்டும். கூடவே வேறிடத்தில் இருக்கும் காதலும் தீர்ந்துவிட வேண்டும். அவ்வாறில்லை என்றால், தவிப்பு காமம் மட்டும் இல்லை என்றாகிறது. பின் காதல் என்பது தவிப்பென்றால் அத்தவிப்புத் தீர வழி என்ன?

காதலில் விழுந்த இருவருக்கிடையே அன்பு பாராட்டிக்கொள் வது தவிப்பைத் தணிக்கலாமா? அவ்வாறெனின், காதலர்கள் அன்பையல்ல, காதலை தான் பரிமாறிக்கொள்ள வேண்டும். முன்பே உறுதி செய்துகொண்டபடி எந்த இருவரிடத்தேயும் எழுப்பிக்கொள்ள முடிந்த அன்பைப் பரிமாறிக் கொள்ள காத லர்கள் என்கிற தனித்துவம் தேவையில்லையே. அதனால், அவ்வன்பினால் காதல் எனும் தவிப்பு அடங்கி விடும் என்று எதிர்பார்ப்பது சரியன்று.

காதலர்கள் பரிமாறிக்கொள்ளவேண்டியது அன்பு+காமம்/2 எனும் காதல் உணர்வை. அவ்வாறு இயலாதென்கையில் காமத்தை மட்டும் பரிமாறிக்கொள்வதை விட அன்பை மட்டும் பரிமாறிக்கொள்ளும் நண்பர்களாய் விலகியிருப்பது கௌரவமானது என்று கருதுவார்கள். காதலித்திராதவர்கள்.

*

காதல் கணங்கள்


அலறும் மலரைப் போல
அலர்ந்த அருணனைப் போல
நீலவண்ணக் குளிரைப் போல
நீந்திவரும் நெருப்பைப் போல
நேற்று ஒலித்த கனவைப் போல
நைச்சிய நிழலைப் போல
காதல் கணங்கள்.

காத்திருந்த கன்னிவெடி போல
கால்மாறிய நாட்டியம் போல
பொங்கிவிட்ட பொழுதைப் போல
புன்னகைத்த புலியைப் போல
பகலிற் புகுந்த கள்வனைப் போல
புத்தம்புதிய பாக்குவெட்டிப் போல
காதல் கணங்கள்.

சிக்கிமுக்கிச் சிறகைப் போல
சிலந்திவலை சீற்றம் போல
பரமபத சோபனம் போல
பங்குசந்தைப் பதாகை போல
பாய்ந்துவரும் பட்டொளி போல
பாதி நமுத்தப் பழங்கதை போல
காதல் கணங்கள்.

நலுங்கிவிட்ட நளினம் போல
மழுங்கிவிட்ட மௌனம் போல
நாற்பதைக் கண்ட நாய் போல
நாலும் தெரிந்த குழந்தை போல
மேகதூத மேட்டிமைப் போல
மேலைக்காற்றின் மௌட்டீகம் போல
காதல் கணங்கள்.

பயமிலா கவிதை போல
முகமிலா மோட்சம் போல
பொருள்படா புதினம் போல
போன சென்ம புத்தன் போல
மரத்தில் மறைந்த மாமதம் போல
மனத்துள் மணந்த மன மதனைப் போல
காதல் கணங்கள்.

*

விஷ்ணு மார்பின் பாரம் அகன்றது!

சென்ற வருடம் [ Feb 2014 ] விஷ்ணுவின் மார்ப்பைப் பிளந்து என்று கோயில்களினுள் நாம் இன்றும் (என்றும்?) காணும் உதாசீனங்கள் அக்கறையின்மை பற்றிப் புலம்பியிருந்தேன். உதாரணங்களாக அவ்வருடப் பயணங்களில் கண்ட சில காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன். அவற்றில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோயில் தாயார் சந்நிதியின் பிரகாரத்தில் ராமானுஜர் கூடத்தின் முகப்பில் தென்பட்ட காட்சியே என் கட்டுரைத் தலைப்பாகியிருந்தது.

vandal-1

‘விஷ்ணுவின் மேல் சிமெண்ட்’ செயல் அந்த வெள்ளி மண்டபம் செப்பனிட உதவிய உபயதாரர் (ஆத்திகர்) பெயர் பலகை வைப்பதற்கான பக்கவிளைவு.

vandal-1-c

எழுதிய சில தினங்களில் சார்பான ஒரு பதிவை [ http://www.jeyamohan.in/47180 ] ஜெயமோகன் தன் தளத்தில் எழுதியிருந்தார். ஓரிருவர் மின்னஞ்சலில் ‘உங்கள் அறியாமையை கண்டிக்கிறேன் (உதாசீனங்களுக்கு பக்தர்கள்தான் காரணம் என்று நான் எழுதிவிட்டிருந்ததால்). ஆனால், இவ்விஷயத்தை குறிப்பிட்டதற்கு நன்றி. கேஸ் போடப்போகிறோம்…’ என்று எழுதியிருந்தனர்.

ஒன்றரை வருடம் கடந்து, இருதினங்கள் முன்னர் (செப்டம்பர் 2015) ஸ்ரீரங்கம் கோயிலின் அதே இடத்தில் இருந்தேன். கண்டது இதை.

vandal-vishnu-2015-01

ஆமாம். விஷ்ணுவின் மார்பின் மீதிருந்து அந்த சிமெண்ட் விளம்பர உதாசீனம் களையப்பட்டுவிட்டது.

vandal-vishnu-2015-02

கலியுக ஆச்சர்யமே.

உப்புக்காகிதத்தால் தேய்க்கப்பட்டு மார்பும் மார்ப்பு சார்ந்த கல் தூண் பகுதிகளும் சுத்தமாய் உள்ளது. தரையின் சிறுகுழிப் பள்ளங்களில் தங்கிவிட்ட சிமெண்ட் மிச்சங்கள் மட்டுமே நடந்தேறியிருந்த உதாசீனத்தின் எச்சங்கள்.

விஷ்ணு பொறுப்பார்.

இனி?

One down, several more to care… அவற்றில் சில உதாசீன உதாரணங்கள் மேற்படிக் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

நம் மரபையும் அதன் சின்னங்களையும் பேணுவது நம் கடமை, உரிமை என்கிற அடிப்படை உணர்வு தொடர்ந்து நம்மிடம் ஆக்கபூர்வமாய் செயல்பட்டால்…

சரி, சரி, நிறுத்திக்கொள்கிறேன். இணையத்தில் நான்கு பத்தி எழுதுவதற்குள் நான் மட்டுமே எழுத்தாளன் என்று நிலை மயங்கி எழுத்து அறிவுஜீவனத்துவத்திற்குள் சென்றுவிடுகின்றது.

ஏற்கெனவே எழுதியதை வாசித்தோ கேள்விப்பட்டோ அவரவ தமதம தறிவறி வகைகளில் அக்கறையுடன் செயல்பட்ட  அனைவருக்கும் நன்றி என்று இங்கு எழுதிவைத்து நிறுத்திக்கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது. என்வழி இயல்வது எண்ணும் எழுத்துமே…

அறிவியல் விளக்கங்கள் – உரை, காணொளி

சில வாரங்கள் முன்னர் பத்து முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காக ஐஐடி மெட்ராஸ் நடத்திய முகாம் ஒன்றில் தமிழில் வெளியாகியுள்ள என் அறிவியல் புத்தகங்களின் உள்ளடக்கத்தை முன்வைத்து உரையாற்றினேன்.

சென்னையைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து என்றாலும் மதுரை போன்று ஓரிரு தென் மாவட்டங்களில் இருந்தும் சிலர் வந்திருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட என்று மூன்று நாட்கள் நிகழ்ச்சியின் வருகைப் பதிவேடு சொன்னாலும் கடைசி தின என் உரையில் அதில் பாதிக்கும் குறைவாகவே வந்திருந்தனர். தொடங்குவதற்கு முன்னரே நம் பேச்சு அத்தனைப் பிரசித்தம்.
Continue reading

நேனோ புத்தகம் – தினமலர் மதிப்புரை

nano-tஎன் நேனோ: ஓர் அறிமுகம் புத்தகத்திற்கான தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள மதிப்புரை

*

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும், திருப்தியும், இந்த நூலின், 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன.

கி.மு., 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, ‘நேனோ’ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், ‘நேனோ’ சார்ந்தவை, எவை ‘நேனோ’ அல்லாதது என்ற செய்திகளும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.
Continue reading

கட்டடங்களும் கோபுரங்களும் – கடிதம்

வணக்கம்

பெரிய எழுத்தாளர் ஆகி விட்டதால் பதில் அனுப்புவீர்களா என்று தெரியாது. இருந்தாலும், உங்கள் பதிவில் பின்னூட்டப்பெட்டி இல்லாததால், அஞ்சலிலேயே அனுப்புகிறேன்.

Continue reading

கட்டடங்களும் கோபுரங்களும்

எய்ன் ராண்ட் புத்தகங்கள், கருத்துகள் எதையுமே இதுவரை வாசித்திராத புத்திசாலி வாசகர்கள் அடுத்த மூன்று பத்திகள் தவிர்த்து வழக்கமான அவரவர் கவனம் அவகாசம் அவசரம் பொறுத்து கட்டுரையை நேரடியாக வாசிக்கலாம்.
*
அவர்களின் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க இக்கலிகால உலகில் அமெரிக்காவில் கூட பல அரைகுறைத்தனங்கள் பொதுநலச் சேவையாய் அறிவுஜீவியல்லாதவர்களால் அன்றாடம் நடந்தேறுவதால் இக்கட்டுரையையும் வாசிக்கவைப்பானேன் என்கிற சுயநலமற்ற altruist மனநிலையில் ‘எய்ன் ராண்ட் பக்தர்கள் வாசிக்க வேண்டாம்’ என்ற எச்சரிக்கை வாக்கியத்துடந்தான் கட்டுரையைத் தொடங்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால், உண்மையான எய்ன் ராண்ட் பக்தர்கள் எப்படியும் வேறு எவர் எழுதும் எதையுமே (அன்றும், இன்றும், என்றும்…) வாசிக்க மாட்டார்கள் என்பதால், எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாகிவிடுகிறது.

அதனால், மற்ற எய்ன் ராண்ட் அபக்த அரைகுறை வாசகர்களுக்கு மட்டும் ஒரு முன்விளக்கம் அளிக்கிறேன். எய்ன் ராண்ட் தன் Fountain Head புத்தகத்தில் அதன் நாயகன் வாயிலாகக் கட்டடக் கலையைப் பற்றி சில கருத்துகளை முன்வைத்திருப்பார். இக்கட்டுரையின் நீளம் கருதி, ஒற்றை வாக்கியச் சுருக்கமாய் அக்கருத்துகளின் பிரதான வாதம் இதுதான்: கட்டடங்கள் அவற்றின் வடிவம் மனிதன் காண்பதற்கு ’அழகாய்’ உள்ளதோ இல்லையோ, மனிதனுக்கான அவற்றின் ‘செயல்பாட்டு உபயோகம்’ எவை என்பதை முன்னிருத்தியே வடிவமைக்கப்படவேண்டும்.

இக்கருத்தாக்கம் கட்டடக்கலை அதைச்சார்ந்த பல (மெக்கானிகல், சிவில் போன்ற) பொறியியல் துறைகளின் வல்லுனர்கள் மத்தியில் புதிதல்ல என்றாலும், இதைப் பற்றி அறிமுகம் இருந்தால் உங்களுக்கு இக்கட்டுரை வேறு திறவுகளையும் அளிக்கலாம்.
Continue reading

அமெரிக்க தேசி பற்றி எழுத்தாளர் இராஜேந்திரசோழன்

இராஜேந்திரசோழன் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த கதாசிரியர்களில் ஒருவர் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ளுமாறு ஆகியுள்ளது என்றால், நீங்கள் இப்பதிவை தொடர்ந்து வாசிக்க அவசியமில்லை என்பதையும் நான் சொல்லாமலேயே தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

சில தினங்கள் முன்னர் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வார காலமாய் சென்னையில் ரகசியமாக நடத்தப்பட்ட புத்தகக்காட்சியில்.

உடன் அருகில் அமர்த்தி ‘படிச்சுட்டேங்க…’ என்றுதான் உரையாடலை தொடங்கினார்.

‘நெஜமாவா சார்? நான் எதிர்பார்க்கலை… நீங்க மொத்தமும் படிப்பீங்கன்னு… நன்றி…’ சிரித்தார்.

‘அப்டியில்லைங்க… எதயுமே நான் படிக்கனும்னு ஆரம்பிச்சேன்னா… அது என்ன தொட்ருச்சுன்னா அப்டியே உள்ள போய்டுவேன்… படிச்சுடுவேன்… இல்லன்னா… அப்டியே பொரட்டிட்டு வெச்சுறது…

நீங்க மொதல்ல சொன்னப்ப (ஐம்பது சொச்சம் தாள்களுடனான ஒரு புத்தகத்தைச் சுட்டியபடி) இது மாதிரி ஏதோ ஒண்ண எழுதிருப்பீங்கனு நெனச்சுட்டேன். அப்றம் சைஸ பாத்ததும்… மொத நாவலை இத்தனை பெரிசா எழுதிருப்பீங்கனு நெனைக்கலை…

போன புக்ஃபேருக்குள்ளயே முடிச்சுடனும்னு இருந்தேன். அடுத்த அடுத்தா வேற வேலைகள். அப்பவே படிச்சுனிருந்தேன், ஒங்களச் சந்திச்சேன். போய் ஒடனேயே படிச்சு முடிச்சுட்டேன். இப்பத்தான் ஒங்கள மீண்டும் சந்திக்கிறேன். படிக்கும்போது எனக்கு இருந்த உணர்வு என்னன்னா, படிப்பதோடு இல்லாம அப்டியே ஒரு சின்ன ரெவ்யூவாது எழுதனும்னு… இரண்டு பக்கம் ஏதாது பத்திரிகைக்கு எழுதி அனுப்பனும்னு இருந்தேன். பார்ப்போம். படிக்கும்போது நான் ரசிச்ச இடங்கள இப்ப மார்க் பண்ணினு வேற வரலை…’

மெட்ராஸ் மொழி வாசம் தூக்கலான இவ்வாறான உரையாடலில் இராஜேந்திரச்சோழன் பகிர்ந்ததின் சாரம் பின்வருமாறு (நினைவில் இருந்துதான் எழுதுகிறேன் | வாசிக்கும் வகையில் உரையாடலை எழுத்துவகைச் சொற்களாய் மாற்றியுள்ளேன்).
Continue reading